திருவருட்பா – பரசிவ வணக்கம்
எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
திருச்சிற்றம்பலத்தில் இருந்து எல்லா உயிர்களை தனது தனிப்பெரும் கருணை மற்றும் அருளால் காத்தருளும் இறைவனை வழிபடுவதால் எல்லா செயல்களும் கைகூடும். உலக உயிர்கள் யாவும் தழைத்தோங்கி நன்மை பெற்று வாழ்ந்திட, தனது திருவருளை தந்து காத்தருளும் அன்னை ஆதி சக்தியுடன் கலந்து காட்சி தந்தருளும் இறைவனை மனமுருகி வணங்குகின்றேன்.
திருவிளங்கச் சிவயோக சித்திஎலாம் விளங்கச்
சிவஞான நிலைவிளங்கச் சிவானுபவம் விளங்கத்
தெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தே
திருக்கூத்து விளங்கஒளி சிறந்ததிரு விளக்கே
உருவிளங்க உயிர்விளங்க உணர்ச்சியது விளங்க
உலகமெலாம் விளங்கஅருள் உதவுபெருந் தாயாம்
மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்தொருபால் விளங்க
வயங்குமணிப் பொதுவிளங்க வளர்ந்தசிவக் கொழுந்தே.
சிவ யோகத்தால் சித்தி எல்லாம் பெற்று மேல் நிலையை அடையவும், சிறந்த சிவானுபவம் பெறவும் திருச்சிற்றம்பலத்தில் திருநடனம் புரியும் ஞான ஒளியே, திருவிளக்காக உள்ள சிவமே ஆகும்.
அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில்புகும் அரசே
அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் ளமைந்தபே ரொளியே
அன்புரு வாம்பர சிவமே.
அன்பெனும் பிடியை தவிர வேறு எந்த வழியாலும் இறைவனை அடக்க இயலாது. அன்பு எனப்படும் கை கிண்ணத்தில் அடங்கும் ஒடுங்கும். அன்பாகிய உயிர்கள் மேலுள்ள ஒளியும் அன்பு எனப்படும். அணுவில் உள்ள பேரொளியாய் இருப்பது பரசிவம் ஆகும்.